search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டியில் சுற்றுலா பஸ் கவிழ்ந்தது"

    ஊட்டி-கூடலூர் சாலையில் 30 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் பிந்தலூர் வித்யாரன்யபுரா பகுதியை சேர்ந்த 31 பேர் ஒரு தனியார் சுற்றுலா பஸ் மூலம் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

    ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டுரசித்த அவர்கள் நேற்று மாலை மீண்டும் பெங்களூருக்கு திரும்பினர்.

    சுற்றுலா பஸ் ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள தவளமலை கொண்டை ஊசி வளைவு அருகே இரவு 8 மணியளவில் சென்றது.

    அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக சுற்றுலா பஸ்சை டிரைவர் சாலையோரமாக ஒதுக்கினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக 30 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

    இதில் பஸ்சுக்குள் இருந்தவர்கள் தலைகீழாக கவிழ்ந்தனர். சிலர் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் 2 ஆண்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயம் அடைந்தவர்கள் வலி தாங்க முடியாமல் கதறி அழுதனர்.

    இந்த விபத்து பற்றி தெரியவந்ததும் கூடலூர் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் நடுவட்டம் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மீட்பு பணிகள் நடந்தது.

    விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் பலியானார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இவர்களில் பெங்களூர் தொட்டபெல்லாபுராவை சேர்ந்த ரவிக்குமார் நாயக்(28), ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த கணேசன்(18) ஆகிய 2 பேரின் பெயர் விவரங்கள் மட்டுமே தெரியவந்தது. பலியான 2 பெண்களின் பெயர் விவரம் தெரியவில்லை.


    இந்த விபத்தில் காயம் அடைந்த 27 பேருக்கும் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மற்றவர்கள் லேசான காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் மைசூர் மற்றும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சுற்றுலா பயணிகள் கன்னடத்தில் பேசியதால் அவர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

    இந்த விபத்தின் காரணமாக ஊட்டி - கூடலூர் சாலையில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. #tamilnews

    ×